Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

ஜோர்பா எனும் உல்லாசி

Since we cannot change reality, let us change the eyes that see reality. -Nikos Kazantzakis
ஜோர்பா தி கிரேக் (Zorba the Greek) நாவல் பற்றி முதன்முறையாகக் கவிஞர் தேவதச்சன் என்னிடம் சொன்ன போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன், அதுவரை  நிகோஸ் கசான்ஸ்சாகிஸின் (Nikos Kazantzakis.) எந்தப் படைப்பையும் நான் படித்ததில்லை,
மிக முக்கியமான புத்தகம் அது என்று சொல்லி, அவசியம் படிக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்தார், கோவில்பட்டியில் அன்றிருந்த இலக்கியச்சூழலில் உலக இலக்கியத்தின் முக்கியமான புத்தகங்களை ஒன்றுகூடி வாசிப்பதும், விவாதிப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, அதன் மையப்புள்ளியாக இருந்தவர் கவிஞர் தேவதச்சன், அவர் சொன்னதற்காக அடுத்த வாரம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு புத்தகக் கடையில் ஜோர்பாவை வாங்கினேன், அது குறித்து எவ்விதமான அறிமுகமும் இன்றி ரயிலிலே கடகடவென வாசிக்கத் துவஙகினேன்,
பகல் நேர பாசஸ்சர் ரயிலது, ஐந்து மணி நேர ரயில் பயணத்திற்குள் அதைப் படித்து முடித்துவிட்டேன், பாதி புரியவில்லை, ஆனால் ரொம்பவும் பிடித்திருந்தது, மறுநாள் இரவு வீட்டில் வைத்து மறுபடியும் வாசித்தேன். ஆங்கில இலக்கிய நாவல்களை போலின்றி கதை சொல்லும் முறையும். விவரிப்பும் முற்றிலும் வேறுவிதமாக இருந்தது, நீட்சேயின் ஜராதுஷ்ட்ரா வாசித்த போது இது போன்ற மனநிலைக்கு உள்ளாகியிருக்கிறேன், அதன் பிறகு ஒரு நாவலின் கதாபாத்திரம் இந்த அளவு என் மனநிலையை புரட்டி போட்டதில் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன்
மறுபடி தேவதச்சனை தேடிச் சென்று அதைப்பற்றி விவாதித்தேன், அவர் வழியாக நாவலின் நுண்மைகள் மெல்லப்புரிய ஆரம்பித்தது,
1946ம் வருசம் வெளியான நாவலது, கிரேக்கத்தில் பெரிய இலக்கிய புயலை கிளப்பியிருக்கிறது
ஜோர்பா என்ற கதாபாத்திரம் முன்வைக்கும் விவாதங்களும்  வாழ்க்கையைப் பற்றிய அவனது பார்வைகளும் வியப்பானவை, ஜோர்பாவை பற்றி  பிந்திய நாட்களில் நிறையப் பேசி, விவாதித்து, மறுவாசிப்பு செய்து அதைப் புரிந்து கொண்டேன், ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா ஒரு பக்கமும், ஜோர்பா தி கிரேக் மறுபக்கமும் வைத்து ஒரு முறை தேவதச்சன் பேசினார், அப்போது தான் ஷோர்பாவின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது, ஜோர்பா எளிய வாசிப்பிற்கு உரிய நாவலில்லை, அது கவனமாக. ஆழ்ந்து வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.
நவீன கிரேக்க இலக்கியத்தில் கசான்ஸ்சாகிஸ் மிக முக்கியமான எழுத்தாளர், அவரது எழுத்தின் பின்புலமாக தீவிரமான ஆன்மத்தேடுதல் இருந்தது,
1930 களில் கதை நடக்கிறது,  பேசில் ஒரு எழுத்தாளன், 35 வயதாகிறது, அறிவாளி . புத்தகப்புழு, வாழ்க்கைவிட்டு சற்று தள்ளி நிற்பதாக உணரும் அவன் க்ரீட் தீவிற்கு படகில் பயணம் செய்வதற்காகக் காத்திருக்கிறான்.  அவனது அப்பாவின் வழியே  மிச்சமாக இருக்கிற சொத்தைக் காப்பாற்றவும். மனத்தடையால் நின்று போன தனது எழுத்துமுயற்சியை மறுஉயிர்ப்புக் கொள்ளவுமே அவன் பயணம் செய்ய நினைக்கிறான், ஊரில் மூடப்பட்டு கிடக்கும் பழைய நிலக்கரி சுரங்கத்தை மறுபடி திறந்து நடத்த வேண்டும் என்ற எண்ணம்  உள்ளுற இருக்கிறது,
அவன் பயணத்திற்காக காத்திருந்த நேரத்தில் வானிலை மோசமாக இருக்கிறது, கபேயில் காத்திருக்கும் போது  டான்டேயின் டிவைன் காமெடி நூலை வாசித்துக் கொண்டிருக்கிறான்
அந்தப் படகுத்துறையில் ஒரு வயதானவரைக் காண்கிறான், அவர் பகட்டான பேச்சும் துடுக்குதனமும் வேடிக்கைகளும் செய்தபடியே சாரங்கி போன்ற ஒரு இசைக்கருவியை வாசித்தபடியே இருக்கிறார், அவர் தான் ஜோர்பா, அவரது முழுப்பெயர்  அலெக்சிஸ் ஜோர்பா, வயது அறுபத்தைந்திருக்கும் , ஆனால் இருபது வயது இளைஞனின் மனது கொண்டிருக்கிறார்.
தாந்தேயின் சொர்க்கம் நரகம் பற்றிய புத்தகத்தை வாசித்து கொண்டிருந்த தன்னை அந்த வயதானவர் கண்காணிப்பது போல உணர்கிறான் பேசில்,
நெருங்கி வந்த ஜோர்பா தனக்கு ஏதாவது வேலை தரமுடியுமா என் பாசிலைக் கேட்கிறார், நீங்கள் யாரென கேட்க, பலமுறை சிறை சென்றவன். மனம் போன போக்கில் வாழ்ந்தவன். சில்லறை வேலைகள் செய்து பிழைத்தவன். வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுபவன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் ஜோர்பா அவரது பேச்சில் மயங்கி வேலை தர ஒத்துக் கொள்கிறான்
இருவரும் ஒரு தீவிற்குப் பயணம் செய்கிறார்கள், அங்கே தங்குவதற்கு ஒரேயொரு விடுதி மட்டுமே இருக்கிறது, அதை நிர்வாகம் செய்பவள் ஒரு வயதான வேசை, அவளுக்கு நிறைய ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக ஊரார் சொல்கிறார்கள், பாசிலை ஊரே திரண்டு வரவேற்கிறது
விடுதியின் சொந்தக்காரிக்கு வயதாகிப் போனாலும் பகட்டும் நளினமும் அப்படியே இருக்கிறது, அவளைப் பார்த்த மறுநிமிசம் ஜோர்பா காதலிக்கத் துவங்குகிறான், அவளது ஒப்பனை அழகை வெளிப்படையாகப் பாராட்டுகிறான்
அவளும் நான்கு முறை திருமணம் செய்து கொண்ட தனது கடந்த காலக் காதல் வாழ்வை அவரோடு பகிர்ந்து கொள்கிறாள், பாசிலுக்குப் பெண்களுடன் பேசுவது என்றால் கூச்சம், எப்படி இந்த ஜோர்பா ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரம் பேசி பழகி படுக்கை வரை போய்விட்டாரே என்று வியப்படைகிறான், ஆனால் அதைப்பற்றி அவரோடு பேசிக் கொள்ளாமல் நழுவுகிறான்
சுரங்க பராமரிப்பு வேலையைத் தொடர முயற்சிக்கிறான் பேசில், அவனது தோழமையான எண்ணங்களைப் புரிந்து கொள்ளாமல் உள்ளுர்வாசிகள் பிரச்சனை தருகிறார்கள், வேலை செய்பவர்களை விட்டு நீங்கள் சற்று தள்ளி நின்று வேலை வாங்க வேண்டும். அவர்களோடு மிகவும் நெருங்கிப் பழக வேண்டாம் என்று அதற்கான காரணங்களைச் சொல்கிறான் ஜோர்பா,  சுரங்க வேலை தொடர்பாக உருவாகும் சிக்கலை தனி ஆளாகச் சமாளிக்கிறான், சுரங்கக் கட்டுமான வேலைக்கு அதிகமான மரங்கள் தேவைப்படுகிறது,  ஆனால் மரம் கிடைப்பதில் ஒரு சிக்கல் உருவாகிறது,
மலையுச்சியிலிருந்து மரங்களை வெட்டிக் கிழே கொண்டு வருவதற்கு ஒரு புதிய திட்டம் தீட்டுகிறான், அதன்படி மலை உச்சியில் இருந்து ஒரு இழுவிசையால் மரங்களைக் கிழே கொண்டுவர முயற்சிக்கலாம், அதாவது வின்ச் செல்வது போன்ற முறையது என்கிறான்
மரங்கள் வெட்டுவதை எதிர்க்கும் மடாலய ஊழியர்களை பேய் வடிவில் பயமுறுத்தி விரட்டுகிறான், பிறகு குருமார்களுடன் தோழமை கொண்டு நினைத்ததை முடிக்கிறான்
இந்த நிலையில் உள்ளுரில் ஒரு அழகான விதவையிருக்கிறாள், அவளை அடைவதற்கு பலரும் முயற்சிக்கிறார்கள், அவளது ஆட்டுக்குட்டியை மீட்க ஒரு முறை பேசில் உதவி செய்கிறான், அதிலிருந்து அவளது அழகில் மயங்கி அவளை மனதிற்குள் காதலிக்க ஆரம்பிக்கிறான், அதை அறிந்து கொண்டு ஜோர்பா தூண்டிவிடுகிறான், ஆனால் பேசில் ஏதாவது எதிர்ப்புவருமோ எனப் பயந்து ஒதுங்கியே போகிறான்,
ஒருமுறை அருகாமை நகருக்கு கட்டுமானப்பொருட்களை வாங்கி வரச் செலகிறான் ஜோர்பா, அங்கே போனதும் கைப்பணத்தைக் குடித்து. நடனமாடி. வேசைகளுட்ன செலவழிக்கிறான்
ஊரிலோ காமம் அதிகமாகி தவித்த பேசில், ஒரு இரவு விதவையின் வீட்டுக்கதவை தட்டி அவளைச் சந்திக்கிறான், இவரும் படுக்கையில் நெருக்கமாக இருக்கிறார்கள், இதைக் கண்ட   விதவையின் மீது ஒரு தலைக்காதல் கொண்ட ஒரு இளைஞன் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறான், இறந்த உடலைத்தூக்கிக் கொண்டு விதவையின் வீட்டை ஊரே கூடி வளைத்துக் கொள்கிறது, பேசில் தப்பிவிடுகிறான்,
மறுநாள் விதவையைத் தாக்க பலரும் முயற்சிக்கிறார்கள், இதற்குள் ஜோர்பா பணத்தை தான் தோன்றித்தனமாக செலவழித்துவிட்டான் என்று கோப்படுகிறான் பேசில்,
ஜோர்பாவோ தான் இளமையை மீட்டு வந்திருப்பதாகச் சொல்லிச் சிரிக்கிறான், இதற்கிடையில் ஒரு தனியிடத்தில் விதவைச் சுற்றி வளைத்து ஒரு கும்பல் தாக்குகிறது, அவளைக் காப்பாற்ற ஜோர்பா முயற்சிக்கிறான், ஆனால் அதற்குள் அவள் கழுத்து அறுபட்டு இறந்து போய்விடுகிறாள், அந்தச் சோகம் பேசிலை உலுக்குகிறது,
இன்னொரு பக்கம் உடல் நலமற்று போன விடுதிக்காரியை ஜோர்பா கூட இருந்து தேற்றி நலமடைய முயற்சிக்கிறான், அவனது நெகிழ்வான அன்பைப் புரிந்து கொள்கிறாள், முடிவில் உடல் நலம் தேறமுடியாமல் அவள் மரணமடைகிறாள் , வாரிசில்லாத அவளது சொத்தை அடைய ஊரே போட்டி போடுகிறது, அவளது வளர்ப்புக் கிளியை மட்டும் தனதாக்கிக் கொள்கிறான் ஜோர்பா,
இதற்குள் ஜோர்பா அமைத்த வின்ச் வழியாக கொண்டுவரப்பட்ட மரங்கள் இழுவை உடைந்து போய் சிதறி மொத்தமும் வீணாகப்போகிறது, தனது கனவுகள் நொறுங்கி போனதை பேசிலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, முடிவில் கடற்கரையில் பேசிலைச் சந்திக்கும்  ஜோர்பா இது தான் வாழ்க்கை என்று  புதிய விளக்க்ம் தருகிறான்
ஜோர்பாவிடமிருந்து  துயரமும் ஒருவிதமான மகிழ்ச்சியே, அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கிறான், அத்துடன் ஜோர்பா வழியாக அவனது இசையையும் நடனத்தையும் உற்சாகத்தையும் வாழ்வை எளிமையான பார்க்கவும் ரசித்து கொண்டாடவும் கற்றுக் கொள்கிறான் பேசில்
வாழ்க்கையை அதன் இயல்பில் விட்டு அனுபவிப்பது ஒரு கலை, அப்படி வாழ்ந்த ஒருவன் தான் ஜோர்பா, அவன் தெய்வீகம் கொண்டவனில்லை, ஆனால் தன் எளிய வாழ்வின் வழியே உன்னதங்களை அறிந்தவன். அவன் மனிதனுக்குக் கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் அவசியம் என்கிறான், அத்துடன் இன்றைய பொழுதை வாழத்தெரியாமல் எதிர்காலத்தைப் பற்றி நினைப்பவன் முட்டாள்  என்கிறான், நடனமும் இசையுமே மனிதனை ஊக்கப்படுத்தும் இரண்டு முக்கியக் கலைகள், அதனால் அத்தனை பேரும் நடனமாட வேண்டும் என்று வலியுறுத்துகிறான்
உற்சாகமாக இருப்பதற்கு வயது ஒரு தடையில்லை, உலகை நாம் ஒவ்வொரு துளியிலும் முழுமையாகக் கொண்டாட வேண்டும், பெண்கள், குடி, நடனம், இசை ,விருந்து, சேர்ந்து விவாதிப்பது. சேர்ந்து வேலை செய்வது என அத்தனையும் மனிதனுக்குத் தேவை என்கிறான் ஜோர்பா.
உலகை மனிதர்கள் சிக்கலாகப் புரிந்து கொண்டால் தாங்களும் சிக்கலாகி உலகையும் சிக்கலாக்கி விடுவார்கள், ஆகவே எதற்காகவும் வருத்திக் கொள்ளாதீர்கள், மனிதநேசமும், எதிர்பார்ப்பு இல்லாத அன்பும். இருப்பதைக் கொண்டாடத் தெரியும் மனநிலையுமே மனிதனுக்குத் தேவை என்று சிரிக்கிறான் ஜோர்பா.
இந்த நாவல் ஹாலிவுட்டில் ஆன்டனி குயின் நடித்துப் படமாகவும் வந்திருக்கிறது, இப்படத்தின் Mikis Theodorakis யின் கிரேக்க இசையும் ஆன்டனி குயினின் நடிப்பும் மிக அற்புதமானவை.
நாவலில் இளைஞனாக வரும் பேசில் முதிர்ச்சியும் அறிவுத்தேட்டமும் கொண்டவனாக இருக்கிறான், தத்துவம், மெய்ஞானம், இலக்கியம் என்று அவனது தேடுதல் இருக்கிறது, அவனுக்கு நேர் எதிரான தன்மைகள் கொண்டவர் ஜோர்பா,
வாழ்வினை நேரடியாகக் கொண்டாடுகிறான், இலக்கியம் தேவையில்லை, தத்துவம் தேவையில்லை. வாழ்க்கையை அனுபவிப்பது தான் முக்கியம் என்கிறான், முதியவனிடம் இளமையான மனதும், இளைஞனிடம் முதிய மனதும் காணப்படுகிறது, பெண்களுடன் பேச்தெரியாத இளைஞர்களின் தயக்கத்தைக் கேலி செய்கிறான், நடனமாடத் தெரியாதவர்களைக் கண்டு ஏளனம் செய்கிறான்.
தொழில் சார்ந்து ஏதாவது ஒரு சிக்கல் உருவாகும் போது இளைஞர்கள் அதிக குழப்பமடைந்து போவதுடன் மிகுந்த மனச்சோர்வும் கொள்கிறார்கள், அதனால் பிரச்சனைகள் அதிகமாகிறது, நிதானமாக யோசித்து முயன்றால் எளிமையான விடை கிடைக்க கூடுகம், அதை தங்களது பதற்றத்தால் மறந்துவிடுகிறார்கள் என்கிறான் ஜோர்பா
ஒஷோ இவனை இன்னொரு புத்தர் என்கிறார், அதாவது புத்தநிலையை அடைந்த நவீன மனிதன் என்று புகழ்ந்து சொல்கிறார், ஜோர்பா பற்றிய அவரது உரைகள் மிக முக்கியமானவை.
இந்த உலகம் ஒரு பெரும் விருட்சம் நான் அதன் ஒரு பச்சைநிற இலை,  கடவுளின் விருப்பம் எனும் காற்றில் நடனமாடியே எனது இருப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன், மரத்தோடு சேர்ந்து  நானும் ஆடுகிறேன்  என்பதே என் இயல்பு என்கிறான் ஜோர்பா
அவனது கருத்தின்படி உலகில் உள்ள எல்லா இயக்கமும் கடவுளே, அதில் கடவுளைக் காண முடிந்தவன் பாக்கியசாலி, மனிதர்கள் பாலுறவு என்ற ஒன்றை ஒளித்து மறைக்க வேண்டியதில்லை. உலகியலிலும் ஆன்மிகத்திலும் முழுமையாக நுகர்பவனே சரியான மனிதன் என்கிறான் ஜோர்பா.
Dionysus, Apollo என்ற இரண்டு கிரேக்க கடவுள்களின் சாயலில் உருவாக்கபட்டவர்களே  ஜோர்பாவும் பாசிலும் என்கிறார்கள் விமர்சகர்கள்,
மதமும் கடவுள் நம்பிக்கையும். அதிகாரத்தின் தோற்றம் வளர்ச்சி. மனித நம்பிக்கைகள் இவையே நாவலின் மையம், எது நன்மை. எது தீமை. அறிவால் உலகை வெல்ல முடியுமா. பாலின்பம் என்பது சுதந்திரமா என்ற விவாதங்கள் நாவலில் தீவிரமாக இடம் பெற்றுள்ளன .
 நாவல் எழுத்தாளன் பார்வையில் சொல்லப்படுகிறது, அவனை ஜோர்பா பாஸ் என்றே அழைக்கிறான், ஆனால் நாவலின் முடிவில் ஜோர்பா தான் உண்மையான பாஸ் ஆகிறான் என்பதை வாசகர்களால் உணர முடிகிறது.
கசான்ஸசாகிஸ் ஏதென்சில் சட்டம் படித்தவர். பின்னர் அங்கிருந்து பாரீஸ் சென்று தத்துவம் பயின்றார், பௌத்த தத்துவங்களை ஆழமாக பயின்றிருக்கிறார். நீட்சே மீது அபிமானம் கொண்டவர், நாடகங்களும் நாவல்களும் எழுதியிருக்கிறார், இவரது The Last Temptation of Christ என்ற நாவல் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி பலநாடுகளில் தடை செய்யப்பட்டது, அது பின்பு படமாகவும் வெளியானது
ஆல்பெர் காம்யூவிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது அது தன்னை விட கசான்ஸ்சாகிஸ்கிற்கு கிடைத்திருக்க வேண்டும் என்று காம்யூ  அறிவித்தார்,
கசான்ஸ்சாகிஸ் சாயலில் தான் நாவலில் பேசில் உருவாக்கபட்டிருக்கிறான், நாவலில் பேசில் படித்துக் கொண்டுவரும்  dante`s Divine Comedy, புத்தகத்தை எப்போதும் கையிலே வைத்து படித்து கொண்டிருப்பார் கசான்ஸ்சாகிஸ், அவரது மரணத்தின் போது கூட அது படுக்கை அருகில் இருந்திருக்கிறது
தமிழில் அவசியம் மொழிபெயர்க்கப்பட வேண்டிய முக்கிய நாவல் இது.
ஆயிரகணக்கான ஆண்டுகளாக மனித இனம் எப்படி இருந்ததோ அப்படியேதான் இப்பொழுதும் இருக்கிறது, அதற்குக் காரணம் மனிதர்கள் அடிப்படையான ஒன்றை மறந்துவிட்டார்கள் என்று குறிப்பிடுகிறான் ஜோர்பா, அப்படி மனிதர்கள் மறந்தது எதுவென கேட்டதற்கு ஜோர்பா சொல்லும் பதில்
The aim of man and matter is to create joy.
சந்தோஷத்தை உருவாக்கவும் காப்பாற்றிக் கொள்ளவும், பகிர்ந்து தரவும் மனிதர்கள் கொள்ளும் போராட்டமே நம் காலத்தின் முக்கியப் பிரச்சனையாக உள்ளது, அதையும் வணிகமாக்கிவிட்டது நமது துரதிருஷ்டமே, இந்தச் சூழலில் இந்நாவலின் அவசியம் இன்னமும் கூடுதலாக இருக்கிறது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers