Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

முதல் நடிகன்

இந்தியாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட SONG OF INDIA, SAVAGE DRUMS, JUNGLE BOOK, THE BLACK PANTHER, MAN EATER OF KUMAON, ELEPHANT BOY, BLACK NARCISSUS. NORTH WEST FRONTIER  போன்ற பழைய ஹாலிவுட் . பிரிட்டீஷ் படங்களாகத் தேடிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படங்களை பார்த்த அமெரிக்க மக்கள் இந்தியாவை ஏதோவொரு மாயமந்திரத்தீவைப்போல தான் நினைத்திருப்பார்கள், இன்று வரை இந்தியாவைப் பற்றி யதார்த்தமான படம் எதையும் ஹாலிவுட் உருவாக்கவேயில்லை, இந்திய மக்களை ஆதிவாசிகள் போல தான் காட்டியிருக்கிறார்கள், அவர்களை மீட்க வந்த அவதூதர்களாகவே வெள்ளைகாரர்கள் படங்களில் வருகிறார்கள், புலிவேட்டையும். வெள்ளைக்கார அதிகாரிகள் அழகான இந்தியப் பெண்களை எப்படிக் காதலித்தார்கள். பிரிட்டீஷ் அரசை எதிர்த்தவர்களை எப்படி அடக்கினார்கள் என்பதே இந்தப் படங்களின் ஆதாரப்புள்ளி, பெரும்பான்மை படங்களில் இந்தியா மீதான அவதூறுகளும் கட்டுக்கதைகளும் துவேசமும் பொங்கிவழிகின்றது
எல்லாப்படங்களிலும்  அழகான, அதிகமாக நகை அணிந்த இளம் பெண்கள். பகட்டான உடை அணிந்த அரசர்கள். வறுமையில் வாடும் ஏழைகள். பாம்பாட்டிகள். யானை.புலிவேட்டை. அழகான அரண்மனைகள். ஆடம்பரமான விருந்து. கழைக்கூத்தாடிகள். மரபிசைக் கலைஞர்கள். திருவிழா. பல்லக்குகள். ரத ஊர்வலம். சாமியார்கள். நெருப்பு நடனம். உட்பகை. என ஒரேவிதமான அம்சங்கள் காணப்படுகின்றன,
இந்தப்படங்களில் ஒரு பகுதி இந்தியாவிலே படப்பிடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது கதையின் பிரதான பகுதிகள் ஹாலிவுட்டிலோ லண்டனிலோ செட்டிற்குள் படமாக்கப்பட்டிருக்கிறது, இந்தப் படங்களை காண்கையில் யார் முக்கிய கதாபாத்திரங்கள் அவர்கள் ஆங்கிலம்பேசும் முறை. மற்றும் இந்திய இசையை இவர்கள் பயன்படுத்திக் கொண்ட முறை. இந்தியாவைப்பற்றிய அவர்களது புரிதல் ஆகியவையே எனது பிரதான கவனமாக இருந்தது, பெரும்பான்மை இனத்துவேச முயற்சிகளே,
அப்படி ஒரு படத்தில் தான் சாபுவை முதன்முதலில் பார்த்தேன், சாபு தஸ்தகீர் என்று அழைக்கப்படும் அந்த நடிகரின் உடல்வாகும் நடிப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
வேறு என்ன படங்களில் நடித்திருக்கிறார் என்று தேடிப்பார்த்த போது தீப் ஆப் பாக்தாத் மற்றும் மேன் ஈட்டர் ஆப் குமாயுன் என பல படங்களில் அவரே முக்கியக் கதாபாத்திரம் என்று தெரியவந்தது, சாபுவிற்காகவே ஆறு படங்களைப் பார்த்தேன்
சாபு எனப்படும் SELAR SHAIK SABU வின் வாழ்க்கைக் கதை அவர் நடித்த படங்களை விடவும் வியப்பானது, 1937ம் ஆண்டு பிரபல பிரிட்டீஷ் டாகுமெண்டரி  இயக்குனர் ராபர்ட் பிளாஹெடி Toomai of the Elephants என்ற கிப்ளிங்கின் கதையைப் படமாக்க விரும்பி மைசூர் பகுதியில் தங்கி இதற்கான நடிகனைத் தேடிக் கொண்டிருந்த போது அரண்மனையில் உள்ள யானை கொட்டிலில் யானைகளுக்கு சேவை செய்யும் 13 வயதுப் பையனைக் கண்டிருக்கிறார், அவனிடம் உனக்கு நடிக்க விருப்பமா என கேட்ட போது அவன் விழித்திருக்கிறான். ஆங்கிலம் பேசத் தெரியாது. அப்பாவோ ஒரு காலத்தில் யானைப்பாகனாக இருந்தவர். அவரும் சிறுவயதில் இறந்து போகவே மாமாவின் உதவியோடு சாபுவும் அவனது  அண்ணனும் ராஜாவின் யானைகொட்டிலுக்கு வேலைக்கு வந்திருக்கிறார்கள், அப்போது ராஜாவிடம் 200 யானைகள் இருந்தன, ஆகவே யானை கொட்டில் என்பது ஒரு தனி உலகமாக இயங்கி வந்தது,
திடீரென ஒரு ஆள் தன்னை சினிமாவில் நடிக்கிறாரா என்று கேட்டது அவனால் நம்பமுடியவேயில்லை,
பிறந்ததில் இருந்த மைசூர் தவிர வேறு எந்த ஊரையும் அறியாத அந்த உள்ளுர் பையனின் கண்கள் மற்றும் உடல்வாகு பிளாஹெடிக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டது, உடனே அவனே தனது கதையின் நாயகன் என்று உறுதி செய்துவிட்டார், அவனோடு அவனது யானை ஹரிவர்த்தனும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். பிரம்மாண்டமான தந்தங்கள் கொண்ட மிகப்பெரிய யானையது, படத்தில் பார்க்க அவ்வளவு கம்பீரமாக உள்ளது
சாபுவிற்கு மைசூர்காடுகளில் சுற்றிய அனுபவம் இருந்த காரணத்தால் அவனால் எலிபெண்ட் பாய் படத்தில் இயல்பாக நடிக்க முடிந்தது, , படப்பிடிப்பிற்காக சாபு முதன் முதலில் தனது யானையோடு லண்டன் பயணம் மேற்கொண்டான், அவனுக்கு வெளிவுலகம் விசித்திரமாக இருந்தது, அதிலும் புகழ்பெற்ற நடிகர்கள். ஸ்டுடியோ. ஆடம்பரக் கார்கள், பகட்டான விருந்துகள், அழகான இளம் பெண்களின் சிரிப்பு. வசீகரம். காட்டில் இருந்து பிடித்துவரப்பட்ட ஆதிவாசி போல தன்னை உணர்ந்ததாகவே சாபு நினைவு கூறுகிறார்
Elephant Boy  1937ம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த படமாக விருது பெற்றது, வசூல் ரீதியாகவும் படம் பெரிய வெற்றியை அடைந்தது
படத்தின் வெற்றி சாபுவை மைசூரில் இருந்து அமெரிக்காவிற்கு இடம் பெறச் செய்தது, தயாரிப்பாளரான Alexander Korda சாபுவோடு  ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார் அதன்படி அவரது படங்களில் தொடர்ந்து நடிக்கத் துவங்கினான், சாபு 1940களில் அமெரிக்கப் பிரஜையாகவே மாறிவிட்டார், அவரது யானை ஹரிவர்த்தன் லண்டன் மிருக்காட்சி சாலைக்கு பரிசாக அனுப்பிவைக்கப்பட்டது
அமெரிக்க சினிமாவில் நடித்த முதல் இந்திய நாயகன் சாபுவே, காட்டுவாழ்வை முதன்மையாக கொண்ட சாகசப்படங்களில் நடிப்பது அவருக்கு எளிதாக இருந்த்து, அதனால் கிடைத்த பணமும் புகழும் அவரது வாழ்க்கையை மாற்றியது, பேச்சு உடை, நட்பு என்று அவர் முழுக்க அமெரிக்க மனிதனாக மாறத்துவங்கினார்
The Thief of Bagdad படத்தில் நாயகனாக நடித்தது முதல் அவரது திரை வாழ்க்கை பெரும் வெற்றியைச் சம்பாதிக்க துவங்கியது, தன்னோடு நடித்த நடிகையை காதலிக்க துவங்கினார், பணமும் வசதியும் வரத்துவங்கியது, 1952ம் ஆண்டு சாபு  தான் வளர்ந்த அரண்மனை யானை கொட்டிலைப் பார்வையிட மைசூருக்கு கெடிலாக் காரில் வந்த போது மன்னரை காண வந்ததை விட அதிக கூட்டம் வந்து திரண்டது அன்றைய செய்தி, புகழின் உச்சிக்குச் சென்ற சாபு இரண்டாம் உலக யுத்த காலத்தில் ராணுவத்தில் இணைந்து பதினோறு மாதம் பயிற்சி எடுத்து வான்படையில் சேவையாற்றியிருக்கிறார்
அமெரிக்க சினிமாவில் இருந்த இனவெறி காரணமாக சாபு வேட்டைக்கார பையன் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே அழைக்கப்பட்டார், நல்ல நடிகராக அவரை ஹாலிவுட் பயன்படுத்திக் கொள்ளவில்லை, அந்தக் கோபம் சாபுவிற்குள் இருந்தது, ஒரு நடிகராக வெற்றி பெற்ற போதும் அவருக்கு ஹாலிவுட் இரண்டாம்தர மரியாதையே அளித்து வந்ததால் சினிமா விட்டு ஒதுங்கி சில காலம் சர்க்கஸில் சேர்ந்து யானைகளை வைத்து வேடிக்கை நிகழ்ச்சி காட்டியிருக்கிறார்
ஒரு நடிகை தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கி குழந்தையை கொடுத்து ஏமாற்றிவிட்டான் என்று நீதிமன்றத்தில் சாபு மீது வழக்கு தொடர்ந்தாள், அது நிருபணம் ஆக முடியாமல் சாபு விடுதலை செய்யப்பட்டார், மர்லின் கூப்பர் என்ற நடிகை  சாபு திருமணம் செய்து கொண்டு திரைப்படத்தில் மீண்டும் கவனம் காட்டத்துவங்கினார், 28 படங்களில் நடித்த சாபு தனது முப்பத்தி ஒன்பதாவது வயதில் எதிர்பாராத மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்
சாபுவின் வாழ்க்கைடிய பற்றி வாசிக்கையில் சினிமாக்கதைகளை விட அதிக திருப்பங்கள் கொண்டதாக இருக்கிறது, திரையில் இன்று காணும் போதும் சாபுவிடம் அலாதியான கவர்ச்சி உள்ளது, சண்டைகாட்சிகளில் காணப்படும் நுட்பமும். வேகமும் அலாதியானது, சிக்ஸ்பேக் உடற்கட்டு, சிரிக்கும்கண்கள் தோள்வரை புரளும் கூந்தல். வெளீர் என்ற பற்கள் என அவரது தோற்றம்  சாபுவை இளம் பெண்களின் கனவு நட்சத்திரமாக ஆக்கியது, பலநேரங்களில் அவரது நீண்ட கேசத்தை கண்டு பெண் போல இருப்பதாக விமர்சகர்கள் கேலி செய்திருக்கிறார்கள், ஆனால் சாபுவினைக் கண்டு மற்ற கதாநாயகர்கள் பொறாமைப் பட வைத்தது இந்த அடர்ந்து புரளும் கேசமே,
அவரது பையன் Paul Sabu ராக் இசைக்கலைஞராக உருவாகினார், மகள் ஜாஸ்மின் சாபு விலங்குகளுக்குப் பயிற்சி கொடுப்பவராகவும் சண்டைப்பயிற்சிகலைஞராகவும் பணியாற்றி இறந்து போனார்
சாபுவைப் பற்றி நினைவு கொள்ளும் ராபர்ட் பிளாஹெடி தான் நானூக் ஆப் தி நார்த் ஆவணப்பட காலம் துவங்கி பயிற்சியில்லாத சிறுவர்களை நடிக்கவைத்திருக்கிறேன், அதில் மிகச் சிறப்பாக. தனித்துவமாக இருந்தது சாபுவே, அவன் பெரிய நடிகன் ஆவான் என்று அவனைப் பார்த்த முதல்நாளே எனக்கு நம்பிக்கை வந்தது என்கிறார்,
1940களில் ஐரோப்பா எங்குமே சாபு கொண்டாடப்பட்டார், அவரைப் பள்ளி மாணவர்களுக்கு அதிகம் பிடித்திருந்த்து, சாபுவைப் போல ஆக வேண்டும் என  நினைத்து பலர் அவரைப் போல வேஷம் புனைந்து கொண்டு சுற்றியலைந்தனர் என்கிறார் கனேடிய விமர்சகர் வில்லியம்ஸ்.
படப்பிடிப்பு நடக்குமிடத்தில் சாபுவைக் காண யாராவது வந்தால் குளியல் அறையில் இருந்தால் கூட அப்படியே வெளியே வந்துவிடுவார் , அவருக்கு யார் முன்னாலும் கூச்சமே கிடையாது, பத்திரிக்கையாளர்களைத் தனது படுக்கை அறைக்கு வர வைத்தே பேசுவார் இது போல தான் பிரபல நடிகர் ஜான் போர்டும் நடந்து கொள்வார், அவர் சாபுவை விட ஒரு படி மேலே,
பலநேரம் நிர்வாணமாக நின்றபடியே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பார், ஒரு முறை ஜான் போர்டு கழிப்பறையில் இருந்த போது வெளியே பத்திரிக்கையாளர்  வந்து காத்திருப்பதாக உதவியாளர் சொன்னதும் போர்டு அவரை உள்ளே அனுப்பிவை என்று சொல்லிவிட்டு கேலியாக சொன்ன பதில்
Send him in — I can deal with two shits at the same time.
இது போன்றவெளிப்படையான பேச்சும் செயலும் சாபுவிடமும் இருந்தது என்று அவரை நினைவுகொள்கிறார் கோர்டா
இன்று ஹாலிவுட்டில் சென்று நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டியிடும் சூழலில் ஐம்பது வருசங்களின் முன்பாகவே அங்கு வெற்றிக் கொடி நாட்டிய ஒரு தென்னிந்திய நடிகரை இந்திய சினிமா மறந்து போனது நமது சாபமே,
அவரை நினைவு கொள்ளவும் கொண்டாடவும் இந்தப் படங்களை அவசியம் மறுமுறை காண வேணடியுள்ளது


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers